தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நடைபெற்ற 56வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (International Physics Olympiad – IPhO 2026) போட்டியில் இந்திய அணி சிறப்பான சாதனை படைத்து, உலகளவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்த போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய ஐந்து மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள்:
- கனிஷ்க் ஜெயின் (புனே, மகாராஷ்டிரா)
- ஷ்ரேஷ்த் சுராயா (மும்பை, மகாராஷ்டிரா)
- ரித்தேஷ் ஆனந்த் பென்டாலே (இந்தூர், மத்தியப் பிரதேசம்)
- ரிஷித் கார்க் (துவாரகா, டெல்லி)
- ஸ்வரித் ஜோஷி (ஆமதாபாத், குஜராத்)
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 87 நாடுகளைச் சேர்ந்த 381 மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய அணி அனைத்து உறுப்பினர்களும் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் இணைந்து புள்ளிப்பட்டியலில் உலக முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் திறன், பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சர்வதேச போட்டித் திறனை வளர்க்கும் நோக்கில் ஒலிம்பியாட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் தேசிய அளவிலான ஒலிம்பியாட் போட்டிகளை, மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (HBCSE) ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
