இந்திய ராணுவத்தின் 31வது தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் இன்று (ஜூலை 1) முறைப்படி பொறுப்பேற்றார். ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
59 வயதான தீரஜ் சேத், இதற்கு முன்பு இந்திய ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக பணியாற்றினார். மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், 1986ஆம் ஆண்டு டிசம்பரில் கவசப் படையில் அதிகாரியாக தனது ராணுவப் பணியைத் தொடங்கினார்.
சுமார் 40 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் அவர், செயல்திறன் மேம்பாடு, ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். நவீன போர்முறைகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை ராணுவ நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைப்பதில் அனுபவம் பெற்ற அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.
ஜம்மு-காஷ்மீரில் கவசப் படைப்பிரிவு, கவசப் பிரிகேட் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படைகளை வழிநடத்தியுள்ள தீரஜ் சேத், நாட்டின் முக்கிய தாக்குதல் படைகளில் ஒன்றான ‘சுதர்சன் சக்ரா கார்ப்ஸ்’ பிரிவுக்கும் தலைமை வகித்துள்ளார். மேலும் தென்மேற்கு மற்றும் தெற்கு ராணுவ கட்டளைப் பிரிவுகளுக்கும் தலைமை தாங்கிய அனுபவம் பெற்றவர்.
புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் நவீன போர்த் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில், இந்திய ராணுவத்தின் திறன் மற்றும் நீண்டகால போர் தயார்நிலையை மேலும் வலுப்படுத்தும் பணியில் தீரஜ் சேத் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
