தமிழக மின்சாரத் துறையின் நிதிநிலை மற்றும் செலவினங்கள் தொடர்பான வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரத் துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கையின்படி, 2001 முதல் 2026 வரை மின்துறையின் வருவாய் அதிகரித்திருந்தாலும், செலவினங்களும் தொடர்ந்து உயர்ந்ததால் மொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் பெறப்பட்ட நிலையில், அதற்கேற்ற வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். மேலும், மின்வாரியத்தில் தேவையான 1.40 லட்சம் பணியிடங்களில் தற்போது 74,714 பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், 65,921 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில், முதற்கட்டமாக 15,000 புதிய பணியாளர்களை நியமிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், குறுகிய கால மின்கொள்முதல் ஒப்பந்தங்களை நீண்டகால ஒப்பந்தங்களாக மாற்றுவதன் மூலம் மாதந்தோறும் ரூ.215 கோடி வரை சேமிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல், மின்வாரியத்தில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு (R&D) பிரிவு தொடங்கப்படவுள்ளதாகவும், பணியாளர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
