திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பெண் உண்மையில் ஆந்திரப் பிரதேசத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
விசாரணையில், இறந்ததாக பதிவுசெய்யப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த பூர்ணிமா ஜுவாங்கா தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் பணியாற்றி வருவதும், தமிழ்நாட்டில் தொழிற்சாலையில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆதார் அட்டை அவருடையது அல்ல என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தொழிலாளர்கள் போலியான ஆதார் அட்டைகளை பயன்படுத்தி வேலைக்கு சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்த ஆதார் மோசடி தொடர்பாக அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த பிறகு, தற்போது தலைமறைவாக உள்ள இடைத்தரகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட விதம் மற்றும் ஆவண மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
