லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் அமரும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை காங்கிரஸ் எம்.பி.க்கள் அருகே அமர்ந்து வந்த திமுக உறுப்பினர்களுக்கு, தற்போது திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்திருந்த வரிசையில் புதிய இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, லோக்சபாவில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் தொடர்ந்து அமர்வது சிரமமாக இருப்பதாக திமுக தரப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி, அரசியல் சூழல் மாறியுள்ளதால் திமுக எம்.பி.க்களுக்கு மாற்று இடத்தில் இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
அந்த கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மூன்றாவது வரிசையில் திமுக எம்.பி.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான மாற்று அமர்வு ஏற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
