பெங்களூரு: மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு பணம் விநியோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், பெங்களூருவில் செயல்பட்டு வரும் கிறிஸ்துவ மிஷனரி அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகள் மீது அமலாக்கத்துறையின் (ED) புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கொத்தனூரில் செயல்பட்டு வரும் ‘தி திமோதி இனிஷியேட்டிவ் (TTI)’ என்ற கிறிஸ்துவ மிஷனரியின் தலைமையகம் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ளது. இந்த அமைப்பு, மத்திய அரசின் உரிய அனுமதி மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) கீழ் தேவையான அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரு, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அமெரிக்க வங்கிகளிலிருந்து பெறப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ஏடிஎம் கார்டுகள் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடப்பு ஆண்டு ஏப்ரல் வரை மொத்தம் ₹92.55 கோடி பணம் எடுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதில், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் அசாம் மாநிலங்களில் இருந்து மட்டும் சுமார் ₹44 கோடி எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பணத்தின் ஒரு பகுதி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள தம்மரி பகுதிக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை விசாரணை தொடங்கிய பிறகு, அமெரிக்காவில் உள்ள சர்வர்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை அழிக்க முயற்சித்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் TTI அமைப்பின் இந்திய நிதிச் செயல்பாடுகளின் தலைவர் ஜோனதன் ராஜன், நிதி மேலாண்மை மற்றும் கார்டு விநியோகப் பொறுப்பாளர் மிகா மார்க், அஜீத் வர்க்கீஸ், மைசூரைச் சேர்ந்த சுப்ரீம் ஜாய், சத்தீஸ்கரைச் சேர்ந்த வர்க்கீஸ் சாக்கோ மற்றும் அசாமைச் சேர்ந்த பாப்லு குர்மி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தேச பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சுனில் குமார் சின்மார் அளித்த புகாரின் அடிப்படையில், கொத்தனூர் போலீசார் மிஷனரி அமைப்பு மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
