செங்கல்பட்டு: “த.வெ.க. ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்பதே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நோக்கம்” என்று அமைச்சர் ஆதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் தலைமையில் ஏராளமானோர் த.வெ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ், அ.தி.மு.க. கட்சி மூழ்கவில்லை என்றும், அதன் பொதுச்செயலாளர் பழனிசாமிதான் அரசியல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வருகிறார் என்றும் கூறினார். மேலும், அ.தி.மு.க.வும் த.வெ.க.வும் வெவ்வேறு கட்சிகள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைதளங்கள் மூலமாக த.வெ.க. ஆட்சியைப் பிடித்ததாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறி வருவதாகவும், ஆனால் தேர்தல் காலத்தில் சமூக வலைதள பிரசாரத்திற்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டது தி.மு.க.தான் என்றும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அரசு செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், த.வெ.க. வேட்பாளர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற்ற வரலாறு இருப்பதாகவும், விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் பழனிசாமியின் மகன் மிதுன் இணையும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் கூறினார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ‘துரோகி’ என்று விமர்சித்த பழனிசாமி, தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
த.வெ.க. ஆட்சியை அகற்றுவதே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் குறிக்கோள் என்றும், தாய்மார்கள் கொண்டு வந்த இந்த ஆட்சியை பாதுகாக்க தாங்களும் அரசியல் செய்து வருவதாகவும் அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.
மேலும், “த.வெ.க. அமைச்சர்கள் நினைத்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் இன்றளவும் எங்கள் அமைச்சர்கள் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.
