வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஸ்கை டைவிங் வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
மிசோரி மாகாணத்தின் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 12 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் விமானம் முழுவதுமாக சேதமடைந்து, புகை சூழ்ந்த நிலையில் கிடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
