தேனி: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது வீரத்துடன் செயல்பட்டு 5 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதற்காக ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான ‘கீர்த்தி சக்ரா’ விருதை பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு அவரது சொந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் – பழனிமணி தம்பதியரின் மகனான மீனாட்சி சுந்தரம், பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். 2017ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர், ஜோத்பூர், லே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி முத்தமிழ்செல்லம் மற்றும் ஒரு வயது மகள் பவதீர்த்தி உள்ளனர்.
பயங்கரவாதிகளை கண்டறிதல், அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தல் மற்றும் என்கவுண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறப்பு ‘ஆன்டி டெரரிஸ்ட் போர்ஸ்’ பிரிவில், அவரது திறமையை கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 100 ராணுவ வீரர்கள் கொண்ட குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இதில் 10 பேர் கொண்ட சிறப்பு பிரிவில் மீனாட்சி சுந்தரமும் இடம்பெற்றிருந்தார்.
தேடுதல் நடவடிக்கையின் போது, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பரூக், இர்பான், உசேன், முஸ்தாக் மற்றும் ரசூல் ஆகிய 5 பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் அந்த வீட்டை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர்.
வீட்டில் இருந்து வெளியேறிய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கிய நிலையில், ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் மீனாட்சி சுந்தரம் முதலில் ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றார். அதனைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் அவரது முகத்தாடையின் ஒரு பகுதி கிழிந்ததுடன், வலது தோள்பட்டையிலும் குண்டு பாய்ந்தது.
கடுமையான காயங்களுடன் இருந்த போதிலும், தனது உடல் வலிமையை திரட்டி தொடர்ந்து போராடிய அவர், 5 பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றார். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் இருந்த அவரை ராணுவ மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு இதுவரை 7 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 3 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது.
அவரது வீரதீர செயலுக்காக இந்திய ஜனாதிபதி Droupadi Murmu வழங்கிய ‘கீர்த்தி சக்ரா’ விருதை பெற்றார். விருதுடன் சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி, பொன்னாடை அணிவித்து, ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விருது குறித்து பேசிய மீனாட்சி சுந்தரம், “கீர்த்தி சக்ரா விருது எனக்கு கிடைத்தது நாட்டிற்காக செய்த சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். ஒவ்வொரு இளைஞரும் நாட்டிற்காக பாடுபட முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
