தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்றும், நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பயணியர் விமானங்களை குறிவைத்து பாகிஸ்தான் திட்டமிட்டு சதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பயணியர் விமானங்களின் இருப்பிட தகவல்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் விபத்துகளை ஏற்படுத்த முயற்சிப்பது மனிதகுலத்திற்கு எதிரான செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,354 சிக்னல் குழப்ப சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதற்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விமானப் போக்குவரத்து வளர்ச்சி பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ள நிலையில், அதனை பாதிக்கும் முயற்சிகளை தீவிர கண்காணிப்பின் மூலம் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த சதிகளுக்குப் பின்னால் இருப்பவர்களை உலக அரங்கில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித தளர்வும் காட்டக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள், புலனாய்வு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
