ஆட்சி கலைந்தாலும் தேர்தலை சந்திக்க தவெக தயாராக உள்ளது. அதேபோல் திமுகவும் தயாராக உள்ளதா என்று அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், “ஆட்சி ஆறு மாதங்களுக்குள் கலைந்துவிடும்” என்று திமுக தலைவர் தெரிவித்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஒருவேளை அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்.
மேலும், தற்போதைய ஆட்சி கலைவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அரசு முழு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கக்கூடிய ஆற்றல் தவெகவுக்கு உள்ளது. நாங்கள் எந்தவிதமான பண பலத்தையும் நம்பி அரசியலில் இல்லை. குறைந்த செலவில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று அமைச்சர்களாகியுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சியினர் தேர்தலில் எவ்வளவு செலவழித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேர்தலை எதிர்கொள்ளும் தைரியமும் நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளதா என்பதை அவர்கள் விளக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
