நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா ரஜினிகாந்த், ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் மேடை என்பது மக்களுக்கான இயக்கம். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக நலன்களுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களிடம் உள்ள ஆக்கபூர்வமான சிந்தனைகள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை மக்கள் சேவைக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தளமாக இந்த இயக்கம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட சமூக மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பினரும் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்படலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
“ஒன்றிணைந்து ஒரு வலுவான மக்கள் சக்தியாக உருவெடுத்து சமூகத்திற்கு நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்துவோம்” என்றும் லதா ரஜினிகாந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், ‘மக்கள் மேடை’ இயக்கத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
