தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், கடந்த திமுக ஆட்சிக்காலத்திலேயே 264 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை மத்திய கோட்டாவுக்கு ஒப்படைக்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 422 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளதாகவும், இதில் 219 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலும் மீதமுள்ளவை அகில இந்திய ஒதுக்கீட்டிலும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் மாநில கலந்தாய்வு முடிந்த பிறகு அரசு மருத்துவர்களால் நிரப்பப்படாத அனைத்து இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் 119 இடங்களும், அதனைத் தொடர்ந்து 145 இடங்களும் என மொத்தம் 264 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அனுப்பிய பிறகு, கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு அந்த இடங்கள் நிரப்பப்பட்டதால் தமிழக அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டில் மாநில கலந்தாய்வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், அவற்றை மத்திய கோட்டாவுக்கு ஒப்படைக்க மறுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவற்றை ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களும் தமிழக மருத்துவர்களால் நிரப்பப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருப்பதாகவும், இதற்காக உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
