திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 2025 டிசம்பர் 1ஆம் தேதி வழங்கிய உத்தரவில், வழக்கமான இடங்களுடன் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் N. Sathish Kumar மற்றும் M. Jothiraman அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, விவகாரத்தில் உள்ள சட்ட ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அப்போது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஜூன் 4ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாடு மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்க இரண்டு வார கால அவகாசம் தேவை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முந்தைய அரசு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றும், தற்போதைய அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதால் கால அவகாசம் வழங்குவதற்கு எதிர்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
விசாரணையின் போது நீதிபதிகள், “நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் என்ன பிரச்னை உள்ளது? சாதாரண விஷயத்தை சிக்கலாக்க ஏன் முயற்சிக்கிறீர்கள் என்று முந்தைய அரசிடமும் கேள்வி எழுப்பியிருந்தோம். அதே நிலைப்பாடு இன்றும் தொடர்கிறது. இது ஜனநாயக நாடு; மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
