திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக த.வெ.க. அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அதன்மூலம் தனது மதச்சார்பின்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் Nainar Nagendran தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், முந்தைய திமுக அரசு அதனை அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் தற்போதைய த.வெ.க. அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரும் 22ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்க உள்ள பதிலே, த.வெ.க. அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் அரசா அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் ஆதரிக்கும் அரசா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இது அனைவருக்குமான அரசு” என்று கூறிய முதலமைச்சர் Vijay, இந்த விவகாரத்தில் ஹிந்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
போலி மதச்சார்பின்மை அரசியலால் ஆட்சியை இழந்த திமுகவைப் போல அல்லாமல், த.வெ.க. அரசு மாற்று அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கும் வகையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன்மூலம் தமிழர் பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்றொரு அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் விவகாரத்தில், முந்தைய அரசுகளைப் போல மொழி, இனம் அல்லது அரசியல் சார்புகளை முன்னிறுத்தாமல், தமிழக மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
