Surendranath College கல்லூரியின் மாணவர் சங்க அறையில் நடத்தப்பட்ட சோதனையில், கரையான் அரித்த நிலையில் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம், துப்பாக்கி மற்றும் மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்கள் நடைபெறவில்லை. இதற்கிடையில், கொல்கட்டாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாணவர் சங்க அறைகளை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மாணவர் சங்க நிதி செலவினங்களை தணிக்கை செய்ய மாநில அரசு அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டது. இதன்படி, கொல்கட்டாவில் உள்ள சுரேந்திரநாத் கல்லூரியின் மாணவர் சங்க அறை சுத்தம் செய்யப்பட்டது.
அப்போது, மர அலமாரியில் இருந்த இரண்டு பெட்டிகளில் கரையான் அரித்த நிலையில் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. மேலும், ஒரு துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, கல்லூரி வளாகம் முழுவதும் விரிவான சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏர் கண்டிஷன் வசதியுடன் இரண்டு படுக்கை அறைகள் செயல்பட்டு வந்ததும், அவற்றில் படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள் மற்றும் குளியலறை வசதிகள் இருந்ததும் தெரியவந்தது.
இந்த அறைகளை பயன்படுத்தியதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த Debasish Bandyopadhyay மற்றும் அவரது மகன் ஷிபாஷிஸ் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கல்லூரி மொட்டை மாடியில் இருந்து ஏராளமான மது பாட்டில்களும், மாணவர் சங்க அறையில் இருந்து ஆணுறைகள் அடங்கிய பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த Sajal Ghosh, மாணவர் சேர்க்கை முறைகேடுகள் மூலம் பெறப்பட்ட பணம் மாணவர் சங்க அறையில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்றும், கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி பணம் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர் சங்க அறைகளிலும் இதுபோன்ற சோதனைகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
