உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்து, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி நிஷா புதிய சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பெருங்களத்தூரைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் அருணா தம்பதியரின் மகளான 16 வயது நிஷா, துரைப்பாக்கத்தில் உள்ள ஏ.பி.எல். குளோபல் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மலையேற்ற வீரரான தனது தந்தையின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே உயரமான சிகரங்களை அடைய வேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொண்டார்.
தற்போது உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான ஏழு சிகரங்களையும் அடையும் இலக்குடன் பயணித்து வரும் நிஷா, இதுவரை ஐந்து சிகரங்களை வெற்றிகரமாக ஏறியுள்ள இந்தியாவின் இளம் வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் மலையேற்றம் குறித்து நிஷா கூறுகையில், இந்த வெற்றியின் பின்னணியில் இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சி இருப்பதாக தெரிவித்தார். குறைந்த ஆக்சிஜன் சூழலுக்கு உடலை பழக்கப்படுத்த ஒரு மாத காலம் சிறப்பு ஹைபோக்சிக் டென்டில் தங்கி பயிற்சி பெற்றதுடன், ஆக்சிஜன் அளவை குறைக்கும் முகமூடியை அணிந்தும் பயிற்சி மேற்கொண்டதாக கூறினார்.
45 நாட்கள் நீண்ட மலையேற்றப் பயணத்தின் போது பல முகாம்களில் தங்கி, ஆக்சிஜன் சிலிண்டர்களின் உதவியுடன் பயணத்தை நிறைவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். மலையின் உச்சியில் 15 நிமிடங்கள் நின்ற தருணம் தனது வாழ்க்கையின் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
அடுத்ததாக வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள டெனாலி சிகரத்தை ஏறத் திட்டமிட்டுள்ள நிஷா, அங்கு நிலவும் கடுமையான குளிர் மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். மேலும், டெனாலிக்குப் பிறகு அண்டார்டிகாவில் உள்ள சிகரத்தையும் அடைய திட்டமிட்டுள்ளார்.
நிஷாவின் தந்தை சசிகுமார் கூறுகையில், ஏழு கண்டங்களின் உயர்ந்த சிகரங்களையும் மிக இளவயதில் ஏறும் பெண் என்ற உலக சாதனையை நிஷா குறிவைத்துள்ளதாக தெரிவித்தார். திட்டமிட்டபடி பயணத்தை நிறைவு செய்தால், 16 வயது 9 மாதங்களிலேயே உலக சாதனையை படைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
