தெலுங்கானா மாநிலம் உருவாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநில மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்காக தெலுங்கானாவின் முன்னேற்றப் பயணத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
தெலுங்கானா மாநில தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில், மாநில மக்களின் படைப்பாற்றல் மற்றும் வணிகத் திறமையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். துணிச்சல், உறுதி மற்றும் போராட்ட மனப்பான்மையை பிரதிபலிக்கும் சிறப்பான வரலாறும் வளமான கலாசாரமும் தெலுங்கானாவுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசிய கனவை நனவாக்குவதில் தெலுங்கானா முக்கிய பங்காற்றும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் மத்திய அரசு வழங்க உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாநில மக்கள் அனைவரும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியுடன் வாழ வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலமாக அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. மாநிலம் உருவான பிறகு சந்திரசேகர் ராவ் முதல் முதல்வராக பதவியேற்றார். தற்போது ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக உள்ளார். இன்றுடன் மாநிலம் உருவாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
