புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிகளில் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை கட்டாயமாக கற்பிக்குமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் Dharmendra Pradhan தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கையின் கீழ் மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளை கற்க விரும்பினால், அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பள்ளிகள் கட்டாயமாக பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ் போன்ற மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை என்றார்.
மேலும், மூன்றாவது மொழியாக வெளிநாட்டு மொழியை தேர்வு செய்யும் மாணவர்கள், அதற்கு முன்னர் இரண்டு இந்திய மொழிகளை படிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அணுகுமுறையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தாய்மொழி கற்பித்தலில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என கூறிய அவர், பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏற்கனவே 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தாய்மொழி கற்பிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அத்துடன், பல ஆண்டுகளாக சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் மூன்று மொழிகளை படித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்த தர்மேந்திர பிரதான், சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் சுமார் 99 சதவீத மாணவர்களும், மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களும் ஏற்கனவே மும்மொழித் திட்டத்தை பின்பற்றி வருவதாக கூறினார்.
புதிய கல்விக் கொள்கையின் நோக்கம், 8-ம் வகுப்புக்குப் பிறகும் இந்த மும்மொழி நடைமுறையை தொடரச் செய்வதே என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், சிபிஎஸ்இ அமைப்பில் உள்ள ஒரு சிலர் மட்டுமே இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
