திருவனந்தபுரம்: கேரளாவின் புகழ்பெற்ற Sree Padmanabhaswamy Temple கோவிலில் இருந்து தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் மாயமானதாக எழுந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தேவஸ்வம் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் முதல்வர் Satheesan தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இதற்கு முன்பு, முன்னாள் முதல்வர் Pinarayi Vijayan தலைமையிலான அரசின் ஆட்சிக் காலத்தில், Sabarimala Sree Ayyappa Temple கோவிலில் துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது.
அந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவரை முக்கிய குற்றவாளியாக கைது செய்தது. மேலும், சில தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து 78 கிராம் தங்க கட்டிகள், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நாணயங்கள், பெருமாளின் நெற்றியில் அணிவிக்கப்படும் பழமையான வைர நாமம் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட அடுக்கு குத்துவிளக்குகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்புடைய சில பிரதிநிதிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக உளவுத்துறை அளித்ததாக கூறப்படும் ரகசிய அறிக்கை கேரள அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கோவிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், முழுமையான விசாரணை இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அரசு விளக்கம்
இதுகுறித்து தேவஸ்வம் அமைச்சர் முரளிதரன் கூறுகையில், “ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து மதிப்புமிக்க பொருட்கள் மாயமானதாக கூறப்படும் புகார் தீவிரமாக விசாரிக்கப்படும். கோவில் சொத்துகளை யாரும் அபகரிக்க அரசு அனுமதிக்காது. இந்த விவகாரம் குறித்து கோவில் நிர்வாகக் குழுவிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது” என்றார்.
மேலும், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், சபரிமலை தங்கம் மாயமான வழக்கின் விசாரணை போக்கில் அரசுக்கு முழு திருப்தி இல்லை என்றும், அந்த சிறப்பு புலனாய்வு குழுவை மாற்றுவதற்கான அதிகாரம் அரசிடம் இல்லாததால் சட்ட ஆலோசனை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
