புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் கிரிஜா அம்மாவின் சமூகப் பங்களிப்பு மற்றும் தேசப்பற்றை பாராட்டி, பிரதமர் Narendra Modi தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் சிறப்பாக குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சமீபத்தில் நாகர்கோவிலில் கிரிஜா அம்மாவை சந்தித்ததாக தெரிவித்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பும் அவரை சந்தித்திருந்ததாக நினைவுகூர்ந்த அவர், இந்த சந்திப்பின்போது பல இளம் மாணவர்களும் உடனிருந்ததாக கூறினார்.
கிரிஜா அம்மா சுமார் 15 கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருவதாகவும், அவற்றில் சென்னையில் செயல்படும் ஒரு பள்ளி முக்கியமான கல்வி நிறுவனமாக விளங்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிப்பதாக இருப்பதாக மோடி பாராட்டினார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட கிரிஜா அம்மா, நாட்டின் வீரர்களின் நலனுக்காக தானும் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். இதற்காக தனது பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் அந்த முயற்சியில் இணைத்தார்.
ஒவ்வொரு மாணவரும் தினமும் ஒரு ரூபாய் வீதம் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாணவரும் ரூ.365 வழங்கியதாகவும் கூறினார்.
இந்த சிறிய பங்களிப்புகள் மூலம் மொத்தமாக சுமார் ரூ.40 லட்சம் நிதி திரட்டப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அந்த தொகைக்கான காசோலையை கிரிஜா அம்மா தன்னிடம் நேரடியாக வழங்கியதாகவும் அவர் கூறினார்.
அவருடன் உரையாடியபோது, இந்தியா மீதான அவரது அன்பும் அர்ப்பணிப்பும் தன்னை மிகவும் கவர்ந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
