புதுடெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் ஏற்கனவே மூன்று மொழிகளை கற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ அண்மையில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் சில மாற்றங்களை அறிவித்தது. அதன்படி, ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மூன்றாவது மொழிக்காக 10-ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதை மத்திய அரசு பின்பற்றும்” என்றார்.
மேலும், “நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 99 சதவீத பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஏற்கனவே தாய்மொழி வழிக் கல்வி அல்லது தாய்மொழி கற்பித்தல் நடைமுறையில் உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை, அதே நடைமுறையை 9-ம் வகுப்பிலும் உறுதி செய்யும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.
தனது குடும்ப அனுபவத்தையும் பகிர்ந்த அவர், “எனது மகளும் 8-ம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக மராத்தி மொழியை படித்துள்ளார். இந்தியாவில் தாய்மொழியில் கல்வி கற்பது என்பது புதிய அல்லது அசாதாரணமான விஷயம் அல்ல” என்று கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிப்பது உள்ளதாகவும், மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கற்றுக்கொள்வது கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
