சென்னை: “ஆட்சியை காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டு வருகிறது. இது வெட்கக்கேடான ஒன்று” என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டு அரசியலில் குதித்த திரையுலக பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு இல்லாத நிலையிலும் ஆட்சியை அமைத்துள்ளார்.
அந்த மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது தமிழக மக்களிடம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், “தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் குதிரை பேர அரசியல் நடத்தப்பட்டு வருகிறது.
தனது ஆட்சியை காப்பாற்றுவதற்காக மக்கள் தீர்ப்பை மதிக்காமல் பல்வேறு அரசியல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றும் குற்றம்சாட்டினார்.
“தமிழகத்தின் 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் தங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை உணராமல், தேர்தல் நேரத்தில் தீய சக்தி என்று விமர்சித்த கட்சிகளின் ஆதரவை தற்போது நாடி வருகிறார்கள்” என்று இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், “அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று ஆதரவு பெறுவது நேர்மையான அரசியல் அல்ல என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.
மூன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து பேசுகையில், “அதிமுக தொண்டர்களின் கடுமையான உழைப்பாலும் தியாகத்தாலும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களிடம் இருந்து, கோட்டையில் உள்ள சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது.
அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே தமிழக வெற்றிக் கழக அமைச்சரின் அறையில் அவர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன” என்று குற்றம்சாட்டினார்.
“இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் சதி நாடகத்தையும், குதிரை பேர அரசியலையும் அம்பலப்படுத்துகிறது” என்றும் இபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
