புளியரை: தென்காசி மாவட்டத்தில் கனிமவள முறைகேடுகள் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அமைச்சர் பிரபு நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து 18 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள தமிழக – கேரள எல்லை சோதனைச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனிமவள லாரிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றன.
இந்த லாரிகள் மூலம் கனிமவள கடத்தல் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கனிமவளத்துறை அமைச்சர் பிரபு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென புளியரை சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கேரளா நோக்கி சென்ற லாரிகள், அவற்றின் அனுமதி பாஸ்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில், தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோருக்கு பல புகார்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அவரது உத்தரவின் பேரில் கனிமவளத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், செயல்பட்டு வந்த 54 குவாரிகளில் 18 குவாரிகளில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த 18 குவாரிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விரிவான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
