எம்.எல்.ஏ எண்ணிக்கையை உயர்த்த த.வெ.க திட்டமா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை: எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்து வந்த அதிமுகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களில் மூவர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்து, பின்னர் த.வெ.கவில் இணைந்துள்ளனர்.
இதற்கிடையில், முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேலும் பல தொகுதிகளில் இடைத்தேர்தலை ஏற்படுத்தி, அதன் மூலம் த.வெ.க தனது எம்.எல்.ஏ எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவும் அதற்கான ஒரு பகுதிதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த அரசியல் நகர்வு குறித்து பேசப்படும் போது, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவங்களும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். அதன் பின்னர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியை அமைத்தது.
அதேபோல், 2020ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததையடுத்து, கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பின்னர் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தனது பலத்தை அதிகரித்தது.
இதுபோன்ற அரசியல் நடைமுறையை தற்போது தமிழகத்தில் த.வெ.க பின்பற்றத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
மத்திய அரசியல் அரங்கில் நடந்த நடைமுறைகள் தற்போது மாநில அரசியலிலும் இடம்பெறுவது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
