இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு: கனடா பிரதமர் மார்க் கார்னி
ஒட்டாவா: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்தியா – கனடா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார்.
அவருடன் 100-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கனடா சென்ற பியூஷ் கோயல், அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மார்க் கார்னி, “இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது கனடா தொழிலாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.
நாங்கள் மிகத் துரிதமாக செயல்பட்டு வருகிறோம். இதுவரை எட்டியுள்ள முன்னேற்றங்களை ஆய்வு செய்ததுடன், எரிசக்தி, வேளாண் உணவு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி துறைகளில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஆலோசனை நடத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் தனது சமூக வலைதள பதிவில், “கனடா பிரதமரை சந்தித்து பிரதமர் மோடியின் வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்தியா – கனடா உறவில் புதிய உத்வேகத்தை உருவாக்கும் வகையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
மேலும், இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
