100% எத்தனாலில் இயங்கும் கார் அறிமுகம் செய்கிறது மாருதி: நிதின் கட்காரி தகவல்
மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “நமது நாட்டில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையாக பெட்ரோல் மற்றும் டீசல் உருவெடுத்துள்ளன. இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் என்ற முறையில் மின்சார ஸ்கூட்டர்கள், கார்கள், பஸ்கள் மற்றும் லாரிகள் அறிமுகமாகுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன” என்றார்.
மேலும், “நமது விவசாயிகள் தற்போது எரிசக்தி வழங்குபவர்களாகவும் நாட்டிற்கு எரிபொருள் விநியோகிப்பவர்களாகவும் மாறி வருகின்றனர். நான் தற்போது பயன்படுத்தி வரும் வாகனம் 100 சதவீதம் பயோ எத்தனாலில் இயங்கக்கூடியது. எத்தனாலின் விலை லிட்டருக்கு 65 ரூபாய். இந்த வாகனம் இயங்கும்போது 60 சதவீத மின்சாரமும் உற்பத்தியாகிறது” என்று கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வாகனத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், “பெட்ரோல் மற்றும் டீசலுடன் ஒப்பிடும்போது, இந்த வாகனத்தின் எரிபொருள் செலவு லிட்டருக்கு சுமார் 25 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது இறக்குமதிக்கு மாற்றாக இருக்கும் உள்நாட்டு எரிபொருள். செலவு குறைவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு குறைவாக இருக்கும்” என்றார்.
இதுபோன்ற Flex-Fuel இன்ஜின் கொண்ட வாகனங்கள் விரைவில் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாருதி சுசுகி நிறுவனம் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது டொயோட்டா, டாடா, மஹிந்திரா மற்றும் சுசுகி உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோன்ற வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய நிதின் கட்காரி, “நமது இருசக்கர வாகனங்களிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைக்க வேண்டும். இந்த எரிபொருட்களில் 87 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை மாசுபாட்டை அதிகரிப்பதோடு, நாட்டின் இறக்குமதி செலவையும் உயர்த்துகின்றன” என்று தெரிவித்தார்.
