“மவுனமே சம்மதம்” – தலிபான்களின் புதிய சட்டம் சர்ச்சை
காபூல்: பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தி வரும் Taliban அரசு, திருமணம் மற்றும் குழந்தை திருமணம் தொடர்பான புதிய சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் வெளியேறிய பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்க்கையில் பங்கேற்பு உள்ளிட்ட பல உரிமைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள புதிய சட்டத்திற்கு தலிபான் உச்ச தலைவர் Hibatullah Akhundzada ஒப்புதல் வழங்கியுள்ளார்.
திருமணம், விவாகரத்து மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட 31 விதிகளை கொண்ட இந்த சட்டத்தின் படி, பருவமடைந்த கன்னிப் பெண் திருமணத்திற்கு வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தால், அதுவே அவரது சம்மதமாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை திருமணங்களை நடத்துவதில் தந்தை மற்றும் தாத்தாவுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மணமகன் சமூக அந்தஸ்தில் தகுதியானவராகவும், வரதட்சணை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தால் திருமணம் செல்லுபடியாகும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணமகன் கொடுமை செய்பவர் அல்லது ஒழுக்கக்கேடானவர் என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், குழந்தை பருவத்தில் நடந்த திருமணத்தை அவர்கள் வயது வந்த பிறகு ரத்து செய்ய விரும்பினால், இஸ்லாமிய சட்டமான “கியார் அல்-புலுக்” அடிப்படையில் தலிபான் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தலிபான் அரசின் இந்த புதிய சட்டத்திற்கு பல மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
