சென்னை: “ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என்று கூறி, தவெக அரசின் சட்டம் ஒழுங்கு நிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை அருகே தெம்மாங்கு பாடல்கள் பாடி வந்த இரு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, படப்பை பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியிருந்த பரத் மற்றும் சீனு என்ற இரு கானா பாடகர்கள் மீது ஆறு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இருசக்கர வாகனங்களில் வந்த அந்த கும்பல், கொடூர ஆயுதங்களால் இருவரையும் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் தற்போது காவல்துறை சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு, இந்த கொலைக்கு காரணமான போதை ஆசாமிகளை உடனடியாக கைது செய்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
