பதவியேற்ற முதல் நாளிலேயே 3 முக்கிய திட்டங்கள் அறிவித்த கேரள முதல்வர் சதீசன்
திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பதவியேற்ற முதல் நாளிலேயே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட மூன்று முக்கிய நலத்திட்டங்களை வி.டி. சதீசன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவருடன், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கேரள தலைமைச் செயலகத்துக்கு சென்ற முதல்வர் சதீசன் தனது அலுவலகப் பணிகளை தொடங்கினார்.
அதன்பின், முதல்வர் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைமைச் செயலர் ஏ. ஜெயதிலக் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சமூக சுகாதார ஆர்வலர்களாக பணியாற்றும் ஆஷா ஊழியர்களின் மதிப்பூதியம் ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் பணியாளர்கள் மற்றும் மழலையர் பள்ளி ஆசிரியர்களின் மதிப்பூதியத்தையும் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேபோல், முதியோர் நலனுக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கேரள அரசுப் போக்குவரத்து கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் வரும் ஜூன் 15 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் குறித்து தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ள முதல்வர் வி.டி. சதீசன், “ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு சொன்னதைச் செய்கிறது. முதல் நாளிலிருந்தே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
