திருப்பூர்: சனாதன தர்மம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
சட்டசபையில் உதயநிதி, “சனாதன தர்மத்தை ஒழிப்பதே எங்கள் நோக்கம்” என்று பேசியதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், “ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் உதயநிதி முன்ஜாமின் பெற்றுள்ளார். இதுபோன்ற கருத்துகளை முன்பும் கூறியதால்தான் மக்கள் அவர்களை தேர்தலில் தோற்கடித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “எம்எல்ஏ மற்றும் அரசு பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசுவது வரம்பு மீறிய செயல். எனவே, உதயநிதியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
