“விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை” – ரஜினிகாந்த்
சென்னை: “விஜய் முதல்வராகியதில் எனக்கு எந்தப் பொறாமையும் இல்லை. அது ஆச்சரியம் கலந்த சந்தோஷம்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் மற்றும் விஜயின் அரசியல் வெற்றி குறித்து அளித்த பேட்டியில், பல்வேறு விமர்சனங்களுக்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.
அப்போது, “திமுக தலைவர் ஸ்டாலினை நான் சந்தித்தது குறித்து பல விமர்சனங்கள் வந்தன. அவர் என்னுடைய 38 ஆண்டு கால நண்பர். எங்களது நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது” என்று கூறினார்.
மேலும், “ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். இருப்பினும் சென்னை கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியடைந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. அதனால் நண்பர் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்தேன்” என்றும் தெரிவித்தார்.
“விஜய் முதல்வராக வருவதை தடுக்க சென்றதாகவும், இரண்டு பெரிய கட்சிகளை இணைக்க முயன்றதாகவும் கூறப்பட்டது. அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த மனிதர் நான் அல்ல” என்று ரஜினி தெரிவித்தார்.
தொடர்ந்து, “விஜய் வெற்றி பெற்றபோது நான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனமும் வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் எக்ஸ் தளத்தில் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன்” என்றும் கூறினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இல்லாத நேரத்தில் ஒருவர் விஜய் முதல்வராகி விட்டதாக கூறியபோது, தான் சிரித்தபடி சென்றதாகவும், அதையே வைத்து பொறாமை என பேசுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன். அப்படி இருக்கும்போது விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை இருக்க வேண்டும்? எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. அவரை என்னுடன் ஒப்பிடுவதும், என்னை அவருடன் ஒப்பிடுவதும் சரியல்ல” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மேலும், “விஜய் தனது 52-வது வயதில் முதல்வராகி, எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் சாதனைகளை விட பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். மத்தியில் பாஜ மற்றும் தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனியாக வெற்றி பெற்றுள்ளார்” என்றும் பாராட்டினார்.
“அதில் எனக்கு பொறாமை இல்லை; ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி மட்டுமே உள்ளது” என்று அவர் கூறினார்.
விஜய் மீது இளைஞர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதாகவும், அவற்றை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்த ரஜினிகாந்த், “புதிய அரசின் மீது மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டு ஆண்டுகள் விஜயை வேலை செய்ய மக்கள் அவகாசம் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, “விஜயின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் தவறுகள் நேரடியாக விஜயை பாதிக்கும்” என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
