புதுடில்லி: உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் ஜாமின் வழங்கப்படுவது விதியாக இருக்க வேண்டும் என்றும், சிறை என்பது விதிவிலக்காகவே இருக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததாக தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த வழக்கில், 2020 ஜூன் மாதம் முதல் விசாரணைக்காக சிறையில் இருக்கும் குப்வாராவைச் சேர்ந்த சையத் இப்திகார் அன்ட்ராபி என்பவர் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் ஜாமின் என்பது விதியாக இருக்க வேண்டும். சிறை என்பது விதிவிலக்காக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுதாரரான சையத் இப்திகார் அன்ட்ராபிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
அத்துடன், தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
