“தோற்றாலும் கொள்கையில் வென்றேன்” – முன்னாள் அமைச்சர் தியாகராஜன் உருக்கம்
மதுரை: “தோற்றுப் போன போதிலும், ஓட்டுக்கு பணம் கொடுக்காத கொள்கையை பின்பற்றியதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று முன்னாள் அமைச்சர் தியாகராஜன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மதுரை மத்தி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர், சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து, தனது அரசியல் பயணம் மற்றும் தேர்தல் அனுபவங்கள் குறித்து 4 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “பத்தாண்டுகளுக்கு முன்பு சமூக முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாட்டு வேலையை விட்டு அரசியலுக்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சமூக நீதி இயக்கங்களின் பங்களிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, என் தந்தை மற்றும் மூதாதையர்களின் பணியை தொடர்வது, குடும்பத்தின் நன்மதிப்பை உயர்த்துவது ஆகிய மூன்று நோக்கங்களுடன் அரசியலில் நுழைந்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“60 வயதில் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தேன். ஆனால் தொடங்கிய பல திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாததால், 2026-ல் மீண்டும் தேர்தலில் போட்டியிட கட்சியில் சீட் கேட்டேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை மெட்ரோ, மத்திய சிறை மாற்றம், மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்ற முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர், மீண்டும் வெற்றி பெற்று அவற்றை முடிக்க திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.
மேலும், திமுக ஐடி விங் உருவாக்கம் குறித்தும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “2017-ல் கட்சித்தலைவர் கூறியதன் பேரில் மாநிலம் முழுவதும் பயணம் செய்து இளைஞர்களை இணைத்து ஐடி விங் தொடங்கினேன். இதன் மூலம் கட்சியின் ஆன்லைன் செயல்பாடுகள் மேம்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வி குறித்து பேசிய அவர், “நான் செய்த பணிகளை வைத்து பார்த்தால் தோல்வி ஏற்படும் என ஒருபோதும் நினைக்கவில்லை. தொகுதியில் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் நான் செய்த ஒரு பணியை மக்கள் காண முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், எதிரணி வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் குறைபாடுகள் இருந்ததாக தகவல்கள் வந்தபோதும், அவர்களை தகுதி நீக்கம் செய்யும் குறுக்கு வழியை தேர்வு செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“ஓட்டுக்கு பணம் தராத வேட்பாளரிடம் தோற்றதில் மகிழ்ச்சி. ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த வேட்பாளரை அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததும் மகிழ்ச்சியே. தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுக்காத கொள்கையை பின்பற்றியதற்காக பெருமைப்படுகிறேன்” என்று தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு வாக்களித்த 44,286 வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், “வெற்றியை விட கொள்கைகளே முக்கியம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, “பத்தாண்டுகள் எம்எல்ஏ மற்றும் அமைச்சராக பொது வாழ்க்கையில் தொடர்ந்து செயல்பட்ட நான், தற்போது சில வாரங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். புதிய அரசு அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்களை தொடங்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
