ராகுலின் வெளிநாட்டு பயண செலவு எங்கிருந்து வந்தது? பாஜ கேள்வி
புதுடில்லி: சம்பித் பத்ரா, ராகுல் காந்தி கடந்த 22 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் எங்கு பயணம் செய்கிறார், யாரை சந்திக்கிறார், இந்த பயணங்களுக்கு யார் நிதி வழங்குகின்றனர் என்பதே முக்கியமான கேள்வி” என்றார்.
மேலும், “2004 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் ராகுல் காந்தி இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, வியட்நாம், சிங்கப்பூர், பஹ்ரைன், மாலத்தீவுகள், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54 முறை பயணம் மேற்கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
இந்த பயணங்களுக்காக சுமார் ரூ.60 கோடி செலவிடப்பட்டதாக கூறிய அவர், “இந்த செலவுகளுக்கான நிதி ஆதாரம் என்ன? ஏன் அது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “இது வெறும் அரசியல் விஷயம் மட்டுமல்ல; வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயமும் ஆகும்” என்றும் சம்பித் பத்ரா கூறினார்.
ராகுல் காந்தியின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்ட ஆண்டு வருமானத்தை மேற்கோள் காட்டிய அவர், “ராகுலின் ஆண்டு வருமானம் ரூ.86.55 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாய்லாந்து, மியான்மர், வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளுக்கு மேற்கொண்ட 60 நாள் தெற்காசிய பயணத்திற்கே சுமார் ரூ.4.50 கோடி செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “2013-14 முதல் 2022-23 வரை தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் ராகுலின் மொத்த வருமானம் ரூ.11 கோடி மட்டுமே. ஆனால் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.60 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது” என்றும் சம்பித் பத்ரா தெரிவித்தார்.
