அமைச்சர் அலுவலகங்களில் பணிபுரிய 10,000 அரசு ஊழியர்கள் ஆர்வம்
சென்னை: தமிழக அமைச்சர்களின் அலுவலகங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றுவதற்காக 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நிதி, வருவாய், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட 41 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகளை ஒருங்கிணைத்து பொதுவாக 30 முதல் 33 அமைச்சர்கள் வரை நியமிக்கப்படுவது வழக்கம்.
அமைச்சர்களின் அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.), இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர், சிறப்பு உதவியாளர், கணினி தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகள் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக் காலத்தில் 33 அமைச்சர்களின் அலுவலகங்களில் சுமார் 120 பேர் வரை பணியாற்றி வந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, அவர்கள் மீண்டும் தங்களது துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி பலத்துடன் ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மேலும் அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், அமைச்சர் அலுவலகங்களில் பணிபுரிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பொதுத்துறையில் 10,000க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மனுக்களை ஆய்வு செய்து, தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
