அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு? மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
புதுடில்லி: தர்மேந்திர பிரதான், அடுத்தாண்டு முதல் நீட் தேர்வை கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அதில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும் தெரிவித்தார்.
மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்றும், மே 7ஆம் தேதி நடந்த தேர்வில் தான் முறைகேடு குறித்த புகார்கள் எழுந்ததாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரணை நடத்தி வருவதாகவும், பல்வேறு மாநில அரசுகளும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வினாத்தாள் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
“பணம் மற்றும் அதிகாரத்தின் மூலம் மாணவர்களின் வாய்ப்புகளை தேர்வு மாபியாக்கள் பறிப்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தேர்வு முறைகேடுகளை தடுக்க அரசு உறுதியாக செயல்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
மறு தேர்வில் பங்கேற்க மாணவர்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும், மாணவர்கள் விருப்பமான தேர்வு மையத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என்றும் கூறினார். இதுகுறித்து விரிவான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடும் என தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு தொடர்பான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும், தற்போதைய தேர்வு அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு முதல் கணினி அடிப்படையிலான தேர்வு முறைக்கு மாறுவது அவசியம் என்றும், நீட் தேர்வை முழுமையாக இணையவழி முறைக்கு மாற்ற வேண்டும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
