R. N. Ravi, எரிபொருள் சேமிப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து பயன்பாடு போன்ற பொறுப்பான நடவடிக்கைகள் மூலம் நாட்டை வலுப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல் காரணமாக உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் சிக்கனமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் தீவிர பங்கேற்பும் தற்சார்பு மனப்பான்மையும் நாட்டை வலுப்படுத்தும். அதற்காக பிரதமர் Narendra Modi உடன் மக்கள் இணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதாரத்தை வலுப்படுத்த எரிபொருளைச் சேமித்தல், பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துதல், தங்கம் வாங்குவதை ஒத்திவைத்தல் மற்றும் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களும் தேசிய வளங்களை பாதுகாக்கும் நோக்கில் இணையவழி கூட்டங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“மக்கள் ஒற்றுமையுடனும் சேவை மனப்பான்மையுடனும் செயல்பட்டால், ஒவ்வொரு தனிப்பட்ட முயற்சியும் தேச கட்டுமானத்தில் சக்திவாய்ந்த பங்களிப்பாக மாறும்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்தியாவின் வலிமை மக்கள் பங்கேற்பில்தான் உள்ளது. தற்சார்பு இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும்” என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியுள்ளார்.
