டாஸ்மாக் கடைகளில் கூடுதல் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை; நிர்வாகம் எச்சரிக்கை
சென்னை: Tamil Nadu State Marketing Corporation நிர்வாகம், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலித்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பல டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், “மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக மதுபானம் விற்கப்படுவதாக தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படும் பறக்கும் படை துணை ஆட்சியர்கள், புகார் பெறப்படும் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி, தவறில் ஈடுபடும் பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
