அமெரிக்க அதிபர் Donald Trump, ஈரான் தொடர்பாக வெளியாகும் செய்திகள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக ராணுவ ரீதியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. அது முற்றிலும் பொய்யான தகவல்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இவ்வாறான அபத்தமான தகவல்களை பரப்புவது தேசத்துரோகச் செயல் போன்றது. இவர்கள் எதிரி நாட்டிற்கு துணைபோகிறார்கள். ஈரானுக்கு உதவி செய்கிறார்கள்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
“இது ஈரானுக்கு வீண் நம்பிக்கையை அளிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யாது. அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுபவர்கள் கோழைத்தனமானவர்கள்” என்றும் அவர் விமர்சித்தார்.
ஈரானின் கடற்படை குறித்து பேசிய டிரம்ப், “ஈரானிடம் இருந்த 159 கப்பல்களும் தற்போது கடலின் ஆழத்தில் மூழ்கியுள்ளன. அவர்களிடம் இப்போது கடற்படையே இல்லை” என்று குறிப்பிட்டார்.
அதேபோல், “ஈரானின் விமானப்படை அழிந்துவிட்டது. அவர்களின் தொழில்நுட்ப அமைப்புகள் செயலிழந்துள்ளன. அந்த நாட்டின் தலைவர்கள் உயிருடன் இல்லை. மேலும், ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, “தோல்வியாளர்கள், நன்றியற்றவர்கள் மற்றும் முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும்” என்று டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.
