“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி” – விஜய் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
தவெக அரசு மற்றும் முதல்வர் Vijay மீது முன்னாள் முதல்வர் M. K. Stalin கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக அரசு அமையவோ அல்லது தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற தனது நிலைப்பாட்டின்படி, திமுக எம்எல்ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக கூட்டணியில் உள்ள பிரேமலதா, ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி மற்றும் நித்தியானந்தம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்ததாக கூறி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்ற நோக்கில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அவர்களின் நிலைப்பாட்டை திமுக மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், இந்த அரசு உருவாக காரணமானவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
“Clean Politics என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது Dirty Politics செய்து வருகின்றனர். பிளவுபட்ட அதிமுக எனும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்து, அந்தக் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “உங்களின் ஆரம்பமே இப்படியாக இருந்தால் முடிவு எப்படி இருக்கும்? இது தூய சக்தியா அல்லது மற்ற கட்சியின் எம்எல்ஏக்களை தூக்கும் சக்தியா என மக்கள் கேட்கும் நிலை உருவாகியுள்ளது” என்றும் விமர்சித்தார்.
முதல்வரின் தற்போதைய செயல்பாடுகளை மக்கள் கவனித்து வருவதாக கூறிய ஸ்டாலின், அதிமுகவில் இருந்து ஆதரவு அளித்த எம்எல்ஏக்களுக்கு என்ன ‘ரிட்டர்ன் கிப்ட்’ வழங்கப்பட இருக்கிறது என்பதையும் மக்கள் பார்க்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
இறுதியாக, திமுக தொடர்ந்து தனது கொள்கையில் உறுதியாக இருந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
