குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சோமநாதர் கோயிலின் 75வது ஆண்டு அமிர்த மகோத்சவ விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு பூஜை செய்தார்.
இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் சோமநாதர் கோயிலின் 75வது ஆண்டு விழா பக்தி மிகுந்த சூழலில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகம், த்வஜாரோஹணம், பிரதிஷ்டை சடங்கு மற்றும் கோயில் கொடியேற்ற நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்றார்.
அமிர்த மகோத்சவக் கொண்டாட்டங்களின் போது இந்திய விமானப்படையின் “சூர்ய கிரண்” விமான சாகசக் குழுவின் வான்வழி சாகச நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
சோமநாதர் ஆலய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, சோமநாத் நகரில் நடைபெற்ற சாலைப் பயணத்தின் போது கிர் சோமநாத் பகுதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் சோமநாதர் ஆலயத்திற்குச் செல்லும் வழியிலும் அவர் சாலைப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோயிலின் பிரதிஷ்டையின் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்பது தெய்வீக அனுபவமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அனுபவித்த தருணத்தை இன்று மீண்டும் உணர்ந்தேன். சோமநாதர் அமிர்த மகோத்சவத்தின் பக்திமயமான சூழல் அசாதாரண ஆன்மிக ஆற்றலை பரப்புகிறது” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
