சென்னை: திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சுகள் வெறும் வதந்தி மட்டுமே என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்காத சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறினார். இதன் காரணமாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு குழப்பங்களும் யூகங்களும் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கவர்னர் தொடர்பாக திமுக தொடர்ந்து எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்து வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் கவர்னரின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளதாகவும் கூறினார்.
“தற்போது பலரும் பல்வேறு விளக்கங்களையும் எதிர்மறை கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கவர்னர் பதவி தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து திமுக எந்த காலத்திலும் மாறாது” என்றும் கனிமொழி தெரிவித்தார்.
திமுக-அதிமுக இணைந்து வெளியில் இருந்து ஆதரவு வழங்க உள்ளதாக பேசப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நிறைய வதந்திகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று கனிமொழி பதிலளித்தார்.
