ராகுல் காந்தியின் கூட்டத்துக்கு அழைப்பு இல்லாததால், வருமானவரித் துறை சோதனை என்று செல்வப்பெருந்தகை நாடகமாடுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் K. Annamalai விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் ஏப்.21 மாலை நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi இன்று இரண்டாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஹிந்தி பேசும் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் தன்னை வீட்டில் சிறைபிடித்து வைத்து பிரசாரம் செய்ய முடியாத வகையில் தடுத்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் K. Selvaperunthagai குற்றம்சாட்டினார். இதற்கு முதல்வர் M. K. Stalin கண்டனம் தெரிவித்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருவது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அல்லது மாநிலத் தலைவராக நான் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தடுக்கிறீர்களா? பாஜக எங்களை கட்டுப்படுத்த முடியாது” என்று கூறினார்.
இந்நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தியின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்த போது, அதனுடன் தொடர்பில்லாத கருத்துகளைச் செல்வப்பெருந்தகை கூறியதாக குறிப்பிட்டார்.
மேலும், ராகுல் காந்தியின் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வப்பெருந்தகைக்கு அழைப்பு இல்லை என்ற உண்மை வெளிவரும் நிலையில், அதை மறைக்கவே தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை சிறைபிடித்துள்ளதாகவும் அவர் நாடகமாடியதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கிடையில், வருமானவரித் துறை சோதனை நடைபெற்றதாக கூறியது உண்மையல்ல என தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டில் அடைக்கப்பட்டதாக கூறிய பின்னரும் செல்வப்பெருந்தகை வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தது, அவர் கூறியதில் முரண்பாடு இருப்பதைக் காட்டுகிறது எனவும் விமர்சித்தார்.
பள்ளி மாணவர்கள் போல காரணம் கூறி சிக்கியுள்ளதாகவும், அவரின் கருத்தை நம்பி முதல்வர் ஸ்டாலினும் எதிர்வினை தெரிவித்தது ஆச்சர்யமாக இருப்பதாகவும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
