சென்னை,
வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக, நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்து வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களில் வித்தியாசம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.115 கோடி என குறிப்பிட்டிருந்தார். ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் ரூ.220 கோடி என தெரிவித்துள்ளார்.
இதனால், அவரது சொத்து விவரங்கள் முழுமையானவையா, உண்மையானவையா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் வேறுபட்ட தகவல்கள் அளித்திருப்பது கவலைக்குரியது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஒரு தொகுதியில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை காட்டி, மற்றொரு தொகுதியில் அதிக மதிப்பை குறிப்பிடுவது சட்டவிரோதமானதும் முறைகேடானதும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மேலும், சுமார் ரூ.100 கோடி அளவுக்கு சொத்து விவரங்களில் வித்தியாசம் இருப்பது முக்கியமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரணை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
