சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீப கால தேர்தல் பிரசார பேச்சுகள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியை நினைவுபடுத்துகின்றன என்ற அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.
பொதுவாக கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பேச்சில் ‘நான்’, ‘எனது’ போன்ற ஒருமை சொல்லாடல்களை அதிகம் பயன்படுத்தாமல், ‘நாம்’, ‘நமது’ போன்ற பன்மை சொற்களை பயன்படுத்துவார்கள். ஆரம்பத்தில் பழனிசாமியும் தனது தேர்தல் பிரசாரங்களில் “நமது ஆட்சி”, “நாம் சொன்னோம்” என்று பேசி வந்தார்.
இந்த பேச்சு மக்களிடையே வரவேற்பு பெற்றதோடு, தொடர்ந்து அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரடியாக விமர்சிக்கத் தொடங்கினார். இதனால் அவரது பிரசாரம் அதிக கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக அவரது பேச்சு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘நாம்’, ‘நமது’ என்ற சொல்லாடல்களுக்கு பதிலாக, “நான் கூறுகிறேன்”, “எனது உத்தரவு” போன்ற ஒருமை சொற்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது பேச்சுகளில் “நான் உத்தரவிட்டுள்ளேன்”, “நான் ஆணையிடுகிறேன்”, “எனது ஆட்சி” போன்ற சொற்களை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இது கட்சியின் முழு கட்டுப்பாடு தன்னிடமே உள்ளது என்பதையும், வலிமையான தலைமையை வெளிப்படுத்துவதற்குமான பாணியாகவும் பார்க்கப்பட்டது.
தற்போது அதேபோன்ற பாணியை பழனிசாமி பின்பற்றுவது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடமே உள்ளது என்பதையும், தன்னை எதிர்ப்பவர்களுக்கு இடமில்லை என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பேச்சு பாணி அமைந்திருக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழகத்தில் வலிமையான தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்த வரலாறு உள்ளதால், அதேபோன்ற தலைமை இமேஜை உருவாக்க பழனிசாமி முயற்சித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது இந்த புதிய பேச்சு பாணி அரசியல் ரீதியாக எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தான் தெளிவாகும்.
