சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 18) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். வரும் 21ஆம் தேதியுடன் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளதால், கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு முன், ஏப்ரல் 15ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற ‘ரோடு ஷோ’வில் பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரம் செய்திருந்தார். அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இந்நிலையில், இன்று கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கிர்த்திகாவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதேபோல், சென்னை மயிலாப்பூரில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து ‘ரோடு ஷோ’ நடத்த உள்ளார்.
இதேநேரம், காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தியும் இன்று தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அவரின் பிரசார நிகழ்ச்சிகள்:
- பொன்னேரி – காலை 11.30 மணி
- சோளிங்கர் – மதியம் 1 மணி
- துறையூர் – மாலை 3.30 மணி
