சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. “இந்த தேர்தல் டில்லி அணிக்கும் தமிழக அணிக்கும் இடையிலானது” என தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்ட அந்நாட்டு முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “ஸ்டாலினுடன் பா.ஜ. ரகசிய உடன்பாடு வைத்துள்ளது” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “ஸ்டாலினுடன் ரகசிய உடன்பாட்டில் இருப்பதாலேயே, மேற்கு வங்கத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக பா.ஜ. நியமித்துள்ளது” என்று தெரிவித்தார்.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர்மீது, அதே கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சித் தலைவர் மம்தா முன்வைத்த இந்த குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பா.ஜ.வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வும், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸும் இந்த குற்றச்சாட்டால் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ. தலைவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு சாதகமான அதிகாரிகளை மாற்றும் நோக்கில் தான் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு மாற்றியுள்ளது. இதை புரிந்து கொள்ளாமல், முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மசங்கடம் ஏற்படும் வகையில் மம்தா பேசியது வேதனை அளிக்கிறது,” என்றார்.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “பா.ஜ.வுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரத்தில், மம்தாவின் இந்த குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாதிக்கிறது.
மம்தா சமநிலை இழந்து பேசுகிறார். 1998, 1999, 2004 லோக்சபா தேர்தல்களில் பா.ஜ.வுடன் அவர் கூட்டணி வைத்ததை மறக்கக் கூடாது,” என்று தெரிவித்தார்.
