`
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் முழுமையாக லீக் ஆன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் மீது சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். படம் எடிட்டர் தரப்பிலிருந்து லீக் ஆகியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்தன.
இதையடுத்து தென்னிந்திய திரைப்பட எடிட்டர் சங்கத் தலைவர் கோபி, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பல முன்னணி எடிட்டர்கள் சென்னை பெப்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஆர்.கே. செல்வமணி கூறியதாவது:
“சினிமா டிஜிட்டலாக மாறியதால், ஒரு படத்தின் காப்பி ஒருவரிடம் மட்டுமே இருப்பதில்லை. ‘ஜனநாயகன்’ சம்பவம் எங்களுக்கு எச்சரிக்கை மணி. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
ஒரு எடிட்டர் தவறு செய்திருந்தால், தனது வாட்டர் மார்க் லோகோவை வைத்து வெளியிடுவாரா? வங்கி கொள்ளையன் அடையாள அட்டையை விட்டு செல்வானா? காவல்துறை குற்றவாளிகளை நெருங்கி விட்டது. ஒரு வாரத்தில் கைது நடக்கும் என நம்புகிறோம்.
இந்த விவகாரத்தில் இயக்குனர் அமீர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும். எங்கள் சங்க உறுப்பினர் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு சினிமாவில் இடமில்லை,” என்றார்.
மேலும், “படத்தின் எடிட்டர் நிரபராதி. அவரது மனைவி கர்ப்பிணி நிலையில் உள்ளார். குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் மனஅழுத்தத்தில் உள்ளார்,” என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, எடிட்டர் சங்கத் தலைவர் கோபி கூறியதாவது:
“படம் வெளியாவதற்கு முன்பே லீக் ஆனது வருத்தமளிக்கிறது. ஆனால், எடிட்டர் மீது குற்றச்சாட்டு சுமத்துவது தவறு. அவரிடம் காப்பி இருந்தது உண்மை; ஆனால் அவர் நினைத்திருந்தால் அதைவிட நல்ல தரத்தில் வெளியிட்டிருப்பார்.
படம் முதலில் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டது. பின்னர் தள்ளிப் போனதால், சில காட்சிகளை மேம்படுத்த ஐதராபாத்துக்கு அனுப்பப்பட்டது. ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டதால், ஒலி கலவை பணிகள் அங்கு நடந்தன. அங்கேயே லீக் ஆகியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
வாட்டர்மார்க் காரணமாக எடிட்டர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், படம் முதலில் எடிட்டரிடமே வருவதால் அது சாதாரணம். உண்மை தெரியும்வரை யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம். காவல்துறை விசாரணை சரியான பாதையில் செல்கிறது,” என்றார்.
மேலும், “எடிட்டருக்கு ஆதரவாக இயக்குனர், படக்குழு மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளனர். இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதபடி தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது,” என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், படம் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோக்கு அனுப்பப்பட்டபோது கசிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை இணையத்தில் பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
படத்தை லீக் செய்தவர்களை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சில நாட்களில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாதுகாப்பு குறைபாடுகளுடன் படக்கோப்புகள் பகிரப்பட்டதும் லீக்கிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் இதுவரை எந்த கருத்தும் வெளியிடாதது, படக்குழுவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
