சாத்தூர்: “ஊழலுக்கும் நல்லாட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியே இந்த தேர்தல். நாட்டிலேயே ஊழல் நிறைந்த தி.மு.க. அரசை அ.தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெல்லும்,” என்று நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில், பா.ஜ. வேட்பாளரும் மாநிலத் தலைவருமான நயினார் நாகேந்திரன் அவர்களை ஆதரித்து, நிதின் நபின் ‘ரோடு ஷோ’ நடத்தி ஓட்டு சேகரித்தார்.
அவருடன் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
இந்த ‘ரோடு ஷோ’ முக்குராந்தல் பகுதி வரை நடைபெற்றது. சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள சர்ச்சில் ஜெபக்கூட்டத்தை முடித்து வந்த கிறிஸ்தவர்களை பார்த்து, நிதின் நபின் கையசைத்து ஓட்டு கேட்டார்.
சிலர் தங்களது குழந்தைகளை அவரிடம் கொடுத்து ஆசி பெற்றனர். வாகனத்தில் இருந்த சரத்குமாருக்கும் பொதுமக்கள் கைகொடுத்து வரவேற்றனர்.
பின்னர் நிதின் நபின் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாட்டிலேயே ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் தி.மு.க.வை, இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வீழ்த்தும்.
எங்கள் கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்த தேர்தல் தமிழகம்-டில்லி இடையேயானது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார்.
ஆனால், இந்த தேர்தல் ஊழலுக்கும் நல்லாட்சிக்கும் இடையேயான போட்டி. இதில் தி.மு.க. அரசு ஊழலுடன் நிற்கிறது; அ.தி.மு.க. கூட்டணி நல்லாட்சிக்காக நிற்கிறது.
பெண்களுக்கு அதிகாரமளிக்க, இடஒதுக்கீடு சட்டத்தை இயற்றும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இந்த சட்டத்திற்கு எதிராக செயல்படுகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
